Saturday, February 13, 2010

எண்ணங்களை மேம்படுத்துங்கள்! வாழ்க்கையை வெற்றி கொள்ளுங்கள்!

இன்று காலை,டொயோடா  கார் தயாரிப்பு நிறுவனம் சந்தித்து வரும் பிரச்சினைகளைக் குறித்து வெளியாகி இருந்த செய்திக் கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவுட்சோர்சிங் பற்றி திரு டோண்டு ராகவன் எழுதிய ஒரு பதிவில் என்னுடைய பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு, இரு வேறு பதிவர்கள் தங்களுடைய அரசியல் காழ்ப்புணர்வு, பதிவில் பேசப்பட்டிருந்த விஷயத்தை முழுக்க மறந்து விட்டு, விவாதங்களைத் திசைதிருப்புகிற மாதிரியாக எழுதியிருந்ததைப் படிக்கவும் நேர்ந்தது.

நேற்றுத் தான் மனிதவளம் என்ற  குறியீட்டில் Just Enough Anxiety என்ற தலைப்பில் திரு ராபர்ட் ரோசென் எழுதியிருந்த புத்தகத்தைப் பற்றிய எனது மதிப்பீட்டை, கொஞ்சம் மறுபடியும் திருத்தம் செய்து மீள் பதிவாக எழுதியிருந்தேன்.

சுய முன்னேற்றம், மனித வளம், எண்ணங்களை மேம்படுத்துதல், மேலாண்மை, நிர்வாகம், சந்தைப் படுத்துதல் முதலான எனக்குப் பிடித்தமான துறைகளில் படித்ததும் பிடித்ததுமான புத்தகங்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்ற எண்ணம்,  இந்த மாதிரி எதிர்மறையான கருத்துக்களைப் படித்த பிறகு, இன்னமும் வலுவானது.

எசைப்பாட்டு என்ற அளவில் அவர்கள் தொனியிலேயே நிச்சயமாக இந்தப் பதிவுகளைத் தொடரப்போவதில்லை என்பதோடு, இந்தப் பக்கங்கள் புத்தகங்களுக்காக மட்டும், வாசித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே என்ற உறுதியை இங்கே பதிவு செய்கிறேன்.

டொயோடா வே என்ற புத்தத்தை  என் சேகரத்தில் தேடிக் கொண்டிருந்தபோது, பதினேழு வருடங்களுக்கு முனனால் வாங்கிய "எண்ணங்களை மேம்படுத்துங்கள்" என்ற புத்தகம் கையில் கிடைத்தது. டாக்டர் மரியான் ரூடி காப்மேயர் எழுதிய Thoughts to build on புத்தகத்தின் தமிழ் வடிவம் 
இது.

திரு பி சி கணேசனின் சரளமான மொழிபெயர்ப்பில் கண்ணதாசன் பதிப்பக வெளியீடாக வெளி வந்தது. நீண்ட நாட்களாகிவிட்ட படியால், மறுபடியும் இந்தப் புத்தகத்தை இன்று படித்துமுடித்துவிட்டேன்.

படித்தவுடனேயே, இந்தப் புத்தகம் தோற்றுவித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு!

எண்பது சிறு அத்தியாயங்களாக, புத்தகம் என்றால் ஒரே  தொடர்ச்சியாக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவுமில்லாமல், ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு மாறுபட்ட சிந்தனையை அறிமுகப் படுத்துகிற விதத்தில் சுமார் முன்னூறு பக்கங்களில் இந்தப் புத்தகம் எழுதப் பட்டிருக்கிறது.

உங்களுக்காகச் சிந்திப்பதாக, அல்லது உங்களை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுவதாக எந்த ஒரு பொய்யான வாக்குறுதியும் இல்லாமல், படிக்கும்போது, உங்கள் அனுபவங்களைத் தொட்டு நீங்களே தொடர்ந்து யோசிக்கத் தூண்டுகிற விதத்தில் எழுத பட்டிருக்கும் புத்தகம் இது!

ஆங்கில மூலம் வெளிவந்து முப்பத்தொன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன என்ற எண்ணமே எழாமல், இன்றைக்கும் பொருந்துகிற மாதிரிப் பொதுவான நடையில், சிந்தனையில் சுய முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் இருக்கக் கூடிய புத்தகம் இது.

தமிழில், இந்தப் புத்தகத்தின் இன்றைய விலை என்ன என்பது எனக்கு தெரியவில்லை. ஆங்கிலத்தில் 2007 பதிப்பு ரூபாய் அறுபத்தைந்துக்குக் கிடைக்கிறது.  இந்தப் புத்தகத்தில் இருந்து, ஒரு சிறு பகுதி, நீங்களே படித்து, புத்தகத்தின் அருமையை மதிப்பிடுவதற்குஉதவியாக!. 


"பல ஆண்டுகளுக்கு முன், எல்லாமே ஒன்று கருப்பாக இருக்க வேண்டும், அல்லது வெண்மையாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணியது உண்டு. ஒன்று, இந்தக் கோடியில் நிற்பேன். அல்லது, அந்தக் கோடியில் நிற்பேன். அசையாமல் நிற்பேன். என்ன இழப்பு நேரிட்டாலும் அந்த நிலையிலேயே உறுதியாக நிற்பேன்.

என்னுடைய நம்பிக்கைகள் வெறும் நம்பிக்கையாக மட்டும் இருக்காது. மற்றவர்களுக்கு சவால்களாகவும் இருக்கும்.

நிர்வாகி ஒருவர், வேலை செய்யும் தன்னுடைய மேஜையின் மீது ஓர் அறிவிப்பை வைத்திருந்தார். "எதையும் சிந்தித்து முடிவெடுங்கள். நான் சொல்கிறபடி  செய்யுங்கள்!" இது தான் அந்த அறிவிப்பு!

நானும் இந்த ரகம் தான். அது அந்தக் காலம். இப்போது முன்பை விட வயது எனக்குக் கூடி விட்டது. ஆண்டுகள் செல்லச் செல்ல நானும் மாறிவிட்டேன். சரியாகச் சொல்ல வேண்டுமானால், அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டேன்.

மற்றவர்கள் வெற்றி பெறுவதைப் பார்த்துப் பார்த்து....அமைதியாக...நளினமாக...நிச்சயமாக....வெற்றிக்கான வழி எனக்கு விளங்க ஆரம்பித்து விட்டது. முன்னிலும் சிறந்த வாழ்க்கை எனக்குப் புரிய ஆரம்பித்து விட்டது.

என்னைச் சுற்றி நான் எழுப்பிக் கொண்ட கோட்டைச் சுவர்களைத் தாண்டி நான் வளர ஆரம்பித்து விட்டேன். கோட்டையின் அசையாத தன்மையே அதை ஒரு சிறைச் சாலையாக்கி விடுகிறது.

தற்காத்துக் கொள்ள எதுவும் இல்லாதபோது, கோட்டை எதற்காக? லட்சியத்தை நோக்கி முன்னேறிச் செல்வதில் கோட்டையின் பங்கு எதுவும் இல்லை. முன்னேறி நகர்ந்து சென்று கொண்டே இருப்பது தானே வாழ்க்கை!

வாழ்க்கையில், சாம்பல் நிறமான பகுதி ஒன்று இருப்பதையும் புரிந்துகொண்டேன். எல்லாமே, ஒன்று வெள்ளையாகவோ, அல்லது கருப்பாகவோ தான் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. எதுவுமே முற்றிலும் சரியானதாகவோ தவறானதாகவோ இருக்க வேண்டிய அவசியமுமில்லை! எல்லாமே கருப்பாகவோ அல்லது வெளுப்பாகவோ இளைஞர்களுக்குத் தோன்றலாம். முதிர்ச்சி அடையாத வளர்ந்தவர்களுக்கும் தோன்றலாம். வேலை நிறுத்தம், கண்டன ஊர்வலம், உள்ளிருப்பு வேலை நிறுத்தம் போன்ற அனைத்திற்கும் இதுவே காரணம்.

இளம்பருவத்தினரின் நடவடிக்கைகளைப் பார்த்து உலகம் புன்முறுவல்  பூக்கிறது. அவர்களின் செயல்களைத் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்பவர்களைப் பார்த்து அல்ல! ஆனால், உலகம் தன்னுடைய காரியங்களை சாம்பல் நிறப் பகுதிகளில் தான் நிறைவேற்றிக் கொள்கிறது. அனுபவம் போதாத நாட்களில், இந்த உண்மை எனக்குப் புரியவில்லை.

கருமையின் விளிம்பும், வெண்மையின் விளிம்பும் ஒன்றிக் கலக்கிற பகுதிதான், நான் இது வரை சொன்ன சாம்பல் நிறப்பகுதி. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இணக்கம் ஆகிற பகுதியும் இது தான்!

சாம்பல் நிறப்பகுதியில் தான்  ஒவ்வொருவருடைய கருத்தும் கவனத்துடன், மரியாதையுடன் பரிசீலிக்கப் படுகிறது. இங்கே தான் ஒவ்வொருவரும் மற்றவருக்குக் கொஞ்சம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் பரஸ்பர ஆதாயத்தைப் பெறுகிறார்கள். இந்தப் பகுதியில், பேரங்கள் கொஞ்சம் கடுமையானதாக இருக்கலாம், கொஞ்சம் சாதுர்யமானதாக இருக்கலாம். ஆனால், தொடர்ந்து முயற்சி செய்தால், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும், ஒத்துழைப்பைப் பரிமாறிக் கொள்ளவும் இந்தப் பகுதி தான்  வழிவகுத்துக் கொடுக்கும் இடமாகவும்  இருக்கிறது.

சாம்பல் நிறப்பகுதியில், தொடர்ந்து பேச முயற்சித்தோமேயானால், பயனுள்ள முடிவுகளுக்கு வர முடியும். இல்லை என்றால் கருப்பு-வெள்ளை என்ற நேரெதிர் நிலையில் தான் நின்று கொண்டே இருக்க வேண்டும்.

இந்த சாம்பல் நிறப்பகுதியில் தான், கூட்டுச் சிந்தனை உருவாகிறது. அனைவருக்கும் பொதுவான, ஏற்றுக் கொள்ளக் கூடிய பயனுள்ள முடிவுகளும் இங்கே தான் சாத்தியமாகிறது.

'உலகத்தில் எல்லா விஷயங்களுமே இப்படித்தான்-- ஒன்று கருப்பாகவோ அல்லது வெளுப்பாகவோ தான் இருந்தாக வேண்டுமென்ற அவசியமே இல்லை' என்பதைப் புரிந்துகொள்ளும் முதிர்ச்சி அடைந்ததற்காக சந்தோஷப்படுகிறேன். கருத்துக்கள், அபிப்பிராயங்கள் எல்லாம் சங்கமிக்கிற இடம் தான் சாம்பல் பகுதி.  இங்கே நல்லெண்ணத்தோடு சந்திக்க முடிகிறவர்களுக்கு, தங்களுடைய கருத்து வேற்றுமைகளைப் பேசித் தீர்த்துக் கொண்டு, ஒரே லட்சியத்தை நோக்கிப் பயணிக்கவும் முடிகிறது.

எதிரெதிர் நிலைகள் சந்திக்கும் சாம்பல் நிறப்பகுதியை கண்டு பிடிக்க முடிந்ததில், எனக்கேற்பட்டதைப் போலவே உங்களுக்கும் சந்தோஷம் உண்டாகியிருக்கும் என்றே நம்புகிறேன்." 



நல்ல புத்தகங்களுக்குத் தனி இடம் இருக்கத் தான் செய்கிறது, இல்லையா? 





Friday, February 12, 2010

போதுமான அளவுக்குக் கவலைப்படு!


கவலைப்படுங்கள்! அது மிகவும் நல்லது! என்ன, எந்த அளவுக்குக் கவலைப்படுவது என்பதைத் தெரிந்து கொண்டு கவலைப் படுங்கள் என்று சொல்கிறார். ராபர்ட் ரோசென் என்கிற உளவியல் மற்றும் தலைமைப் பண்பு நிபுணர்!

கவலைப்படுவதா? அது மிக மோசமாயிற்றே என்று தான் நமக்குத் தோன்றும். கவலைப் படுவதால் என்ன ஆகிவிடப்போகியாது என்று வேதாந்தமும் கூடப் பேசுவோம். கவலைப் படவேண்டிய தருணங்கள் வரும்போது அதை முரட்டுத்தனமாக எதிர்ப்பதிலோ, அல்லது அந்தச் சூழ்நிலையை விட்டு ஓடிவிடுவதிலோ தான் நம்முடைய கவனம் இருக்கும். ஆனால், இந்த மனப்பான்மை மிகவும் காலாவதியாகிப் போனது என்கிறார் ராபர்ட் ரோசென்.


தன்னுடைய  Just Enough Anxiety என்ற புத்தகத்தில், கவலைகள் நமக்குகூர்ந்து கவனிக்கும் ஆற்றலைத் தருகின்றன, கற்றுக்கொள்வதற்கும், மற்றவர்களோடு ஒப்பீடு செய்து மாற்றிக் கொள்வதற்கும், ஆக்க பூர்வமாகச் சிந்திப்பதற்கும், உண்மையிலேயே சிறந்த பலனைத் தருவதாகவும் ஆன கருவியாக ஆக முடியும் என்று சொல்கிறார்.  

கவலைகள் அளவுக்கு அதிகமாகும்போது பயம், குழப்பம் இவைகளோடு நம்பிக்கையை இழந்து விடுவதும் உண்மை  தான்! அதே நேரம், கவலைப்படாமல் அசட்டையாக இருந்து விடுவதும் கூட, ஒருவிதமான மந்தத்தன்மையுடன், போலியான அல்லது அசட்டுத் தனமான தைரியம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற மாதிரிக் கற்பனையில் மிதப்பதுமே கூட ஆபத்தானது தான்! ஒரு ரப்பர் பான்ட் இருக்கிறது, அதை ஒரு எல்லைக்கு மேல் இழுத்தால் பிய்ந்து விடும்! அந்த எல்லையை அறிந்து கொள்ள முயற்சிக்காமல் சும்மா இருந்து விட்டால் ரப்பர் பான்ட் நமக்கு எந்த விதத்திலுமே பயன்படாது போய்விடும் இல்லையா? அதே மாதிரி, பிய்ந்து விடுகிற நிலைக்கும், அதனுடைய எலாஸ்டிசிடியைப் பயன்படுத்தாமல் இருக்கிற நிலைக்கும் மத்தியில் இருக்கும் அதிகப்பயன்பாடு  அல்லது பயன்பாட்டு உச்ச நிலையைக் கண்டுகொள்வதில் தான், கவலைகள் மிக வலி.மையான கருவிகளாக, வெற்றியைத் தருபவையாக  நமக்குக் கிடைக்கின்றன என்கிறார் ஆசிரியர்.

நமக்கு இன்னமும் தெளிவாகப் புரிந்துகொள்ள வீணை, கிடார் போன்ற தந்தி வாத்தியங்களில் தந்திகள் போதுமான அளவுக்கு முறுக்கேற்றினால் தான்  தேவையான ஒலி கிடைக்கும். அளவுக்கு அதிகமாக முறுக்கினால், தந்தி அறுந்து விடும், அளவு குறைந்து போனாலோ தொய்ந்து போய் ஒலியே வராது என்பது போல, கவலைகளால் ஏற்படும் முறுக்குத் தன்மை கூட அவசியம் தான் என்பது இவருடைய வாதம்..

பாதுகாப்பின்மை, அசௌகரியம், குழப்பம், வலி இவைகளை அனுபவித்துப் புரிந்துகொள்வதில் நம்முடைய உச்சகட்டத் திறமையை வெளிப்படுத்தும் தருணங்களாக,தனிநபராகவோ அல்லது குழுக்களாகவோ எப்படியிருந்தாலும் சரி, 'போதுமான அளவுக்குக் கவலைப்படு' என்பது ஒரு வாழும் கலையாகவே ஆகிவிடும் என்று சொல்கிறார்.

கவலைப்படுவது என்பது, அதைப் பற்றி எவ்வளவு மோசமாகச் சொல்லப்பட்டபோதிலும், அதன் மோசமான விளைவுகள் உண்மையாக இருந்தபோதிலும் கூட, உண்மையான பிரச்சினை இல்லை!

கவலைகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம், என்ன செய்கிறோம் என்பதே உண்மையான பிரச்சினை என்கின்ற இந்த வலைப்பக்கங்களையும் படித்துப்பாருங்கள்!!


இந்தப் புத்தகத்தை எனது நண்பர் ஒருவர் சில நாள் இரவலாகக் கொடுத்திருந்தார். குறிப்புக்கள் கூட எடுத்துக் கொள்ளவில்லை. நினைவில் இருந்ததை வைத்து, இணையத்தில், ஆசிரியருடைய வலைப் பக்கங்களில் படித்ததை வைத்தும் தான், படித்தவற்றை நினைவு படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. அப்படி நினைவு படுத்திக் கொண்டவை கூட, புதிய விஷயங்களாகத் தென்படவில்லை என்பது இந்தப் புத்தகத்தின் மைனஸ் பாயின்ட். என்று இப்போது திரும்பிப் பார்க்கிறபோது தோன்றுகிறது.


புத்தகங்கள் ஒரு ஆரம்பப் புள்ளியாக மட்டுமே இருக்க முடியும். How to stop worrying and start living புத்தகத்தில் டேல் கார்னகி சொன்ன விஷயங்களில் இருந்து இவர் சொல்வது அதிக வித்தியாசமில்லை. கார்னகி நிறைய விஷயங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார், இவர் கவலைப்படுவது என்ற ஒரே ஒரு அம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவுதான்!

இன்னொருத்தர் Fear is the Real Driving Force என்று ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு, பயப்படுங்கள் அதுவும் நல்லது என்று புத்தகம் எழுத, அதுவும் கூட பரபரப்பாக விற்பனையாகும்! பேசப்படும்! சுய முன்னேற்றத்திற்கு உதவுகிறேன் என்று புத்தகங்கள் எழுதுகிறவர்கள் எண்ணிக்கை பெருகிய அளவுக்கு, புத்தகங்களில் பேசப்பட்ட கருத்துக்கள் உதவியாக இல்லை என்பதையும் இங்கே சேர்த்துச் சொல்ல வேண்டும்.


புத்தகங்கள் உற்ற தோழனாக இருக்க முடியும், உதவியாகவும் இருக்க முடியும் என்று சொல்கிற அதே தருணத்தில், எல்லாப் புத்தகங்களையும் அதே தரத்தில் வைத்துப் பார்க்க முடியாது என்பதைச் சொல்வதற்காகவே, ஏற்கெனெவே என்னுடைய இன்னொரு வலைப் பூவில் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தபோதிலும் கூட, தேர்ந்தெடுத்துப் படிப்பது குப்பை கூளங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க உதவும் என்பதற்காக, இந்தப் புத்தகத்தைப் பற்றிய கருத்தை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.



சுய முன்னேற்றம், மனித வளம் பற்றிய ஏராளமான உதவிப் புத்தகங்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பல கோடிப் பிரதிகள் விற்றுத் தீர்ந்த பின்னரும் கூட, இந்தப் புத்தகங்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய  ஒன்றோ இரண்டோ தான், படிப்பவர்களுக்கு உண்மையிலேயே உதவியாக இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள அதிகக் கஷ்டப்பட வேண்டியது இல்லை.

மனிதவளம், வாழ்வியல் யதார்த்தங்களைப் புரிந்து கொள்ள, புத்தகங்கள் ஒரு எல்லை வரைதான் துணையாகவும், கருவியாகவும் பயன் படும்.  வாழ்க்கையை நாம் எவ்விதம் எதிர்கொள்கிறோம் என்பது மட்டுமே நம்முடைய அணுகுமுறையைத் தீர்மானிக்கிறது. அந்த அணுகுமுறையைப் புத்தகங்கள் மட்டுமே கற்றுக் கொடுத்து விட முடியாது என்பதே என்னுடைய கருத்தாக இருக்கிறது.



Saturday, February 6, 2010

ஆலிவர் ட்விஸ்ட்! எழுத்து காலத்தின் கண்ணாடியாக...!

என்னுடைய இன்னொரு வலைப்பக்கங்களில் பொருளாதாரம், வங்கிகள், அரசியலைத் தொட்டு எழுதிய சில பதிவுகளில், சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய ஆலிவர் ட்விஸ்ட் கதையைப் படிக்கும் படி சிபாரிசு செய்வது உண்டு. முக்கியமான காரணம், அந்தக் கதையின் தொடக்கமே இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற்புரட்சி எப்படி கிராமங்களில் இருந்து மக்களை நகர்ப்புறத்துக்கு, சேரிகளில் கூலித் தொழிலாளர்களைக் கொண்டு வந்து தள்ளியது என்பதை விவரிக்கும், காலத்தின் கண்ணாடியாக இருப்பதை அறிந்து கொள்வதற்காகத் தான். ஒரு நல்ல எழுத்தாளன், தான் வாழும் காலத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கிறான். அவனைப் பாதித்த விஷயங்கள், சமூகத்தில் அவன் பார்த்த, அவனைப் பாதித்த நிகழ்வுகள், அவனுடைய ஆதங்கத்தோடு சேர்ந்தோ, அல்லது அவன் புரிந்து  கொண்ட விதத்தை ஒட்டியோ தான் அவன் படைப்புக்கள் இருக்கும். மனிதனை நேசிக்கத் தெரிந்த எழுத்தாளர்கள் அனைவரிடத்திலும் காணக் கிடைக்கிற பொதுவான பண்பு இது. 

தமிழில் மட்டுமல்ல, பொதுவாகவே வலைப் பதிவுகளைப் படிக்க வருபவர்கள், மேலோட்டமாகவே பார்த்துவிட்டுப்போய் விடுகிறார்கள்.அவர்களைக் குறை சொல்லியும் பயனில்லை. இன்றைக்கு எழுத்து என்பது, அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு  ஓட வைக்கிற  ஃபாஸ்ட் ஃபுட் சமாச்சாரமாகவே ஆகிப்போன நிலையில், ஆழ்ந்த வாசிப்பு என்பது மிகவும் அரிதாகிப்போன விஷயமாகவே படுகிறது.

இப்படிக் காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டு, அந்த அவஸ்தையோடேயே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதை ஆரம்பித்து வைத்த தொழிற்புரட்சியின் பக்க விளைவுகளில் எழுந்த கதை ஆலிவர் ட்விஸ்ட்! சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய இரண்டாவது கதை இது. ஒரு சிறுவனை மையமாக வைத்து எழுதிய கதை என்று பார்த்தால், அவருக்கு இது முதலாவது முயற்சி என்று தான் சொல்ல வேண்டும். உலகமெங்கும் பரவியதாக இருக்கும் இரண்டு சுவாரசியமான வாக்கியங்கள், உங்களுக்கும் கூடத் தெரிந்தது தான்,  இந்தக் கதையில் தான் இருக்கிறது!

ஒன்று, "சட்டம் ஒரு கழுதை!"

கிட்டத் தட்ட  நூற்றெழுபது வருடங்களுக்கு முன்னால் டிக்கென்ஸ் எழுதிய  இந்த வார்த்தை, இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது!

இன்னொன்று, "தயவு செய்து ஐயா, எனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும்!"

சாதாரண ஜனங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காகத் தொடர்ந்து, இன்றைக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் கெஞ்சல்!

தொழிற்புரட்சியின் முக்கியமான அம்சம், தேவை இருக்கிறதோ இல்லையோ, உற்பத்தி செய்து அதை நுகர்வோர் தலையில் கட்டி விடுவது! கிராமப் பொருளாதாரத்தின் வலிமை இருப்பதைப் பகிர்ந்து கொண்டு, வளர்ச்ச்சி இல்லை என்றாலும் தேய்மானமாவது இல்லாமல் இருந்தது. தொழிற்புரட்சி அத்தனையையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டதன், ஏழைகளையும் உற்பத்திசெய்ததன் ஆரம்ப காலத்தைத் தொட்டுச் செல்லும் கதை ஆலிவர் ட்விஸ்ட்.

Bentley's Miscellany என்ற பத்திரிகையில். 1837 பெப்ருவரியில் தொடங்கி, 1839 ஏப்ரல் மாதம் வரை தொடர்ச்சியாக வெளிவந்த தொடர்கதையாகத் தான், ஆங்கில வாசகர்களுக்கு அறிமுகமானது. 

சட்டம் ஒரு கழுதை, எனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று சில வாக்கியங்களை அறிமுகப் படுத்திப் பிரபலப் படுத்தியது மட்டுமல்ல, அந்த நாளைய சரித்திரக் குறிப்பேடுகளில் கூடப் பதிவு செய்யப் படாமல் இருந்த ஏழை மக்களின் துயரங்களை விரிவாகப் பதிவு செய்த, சமூகப் பிரக்ஞையோடு  வெளிவந்த  முதல் புதினம் இது தான்

மற்ற எழுத்தாளர்கள், பணம் படைத்தவர்களைப் பற்றியே எழுதி எழுதி மாய்ந்துகொண்டிருந்த நேரத்தில், வெளிவந்த வித்தியாசமான எழுத்து இது.

கதை ஆலிவர் ட்விஸ்ட் என்ற சிறுவனைச் சுற்றியே ஆரம்பிக்கிறது. இவனைப் பெற்றுப்  போட்டதும் தாய் இறந்து விடுகிறாள். தந்தை யார் என்று தெரியவில்லை. ஏழைகளுக்கான சட்டம் என்ற ஒன்றின் கீழ் நிர்வகிக்கப் படும் ஒரு விடுதியில் முதல் ஒன்பது வருடங்கள்! இல்லாதவர்கள் அனுபவிக்கும் கொடுமை பசியுடன் அந்த ஒன்பது வருடங்கள் இருப்பதை,கானா காப்பீடு, சமூகக் காப்பீடு என்று இப்போதுகூடச் சொல்லப் படுவதில் உள்ள ஓட்டைகளை, அந்தக் காலத்திலேயே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் கதாசிரியர்!

ஒன்பது வயது நிறைந்ததும், திருமதி மான் நிர்வகித்து வரும் அமைப்பில் இருந்து, வேலை செய்வதற்கு வேறோர் இடத்திற்கு அனுப்பப் படுகிறான் ஆலிவர் ட்விஸ்ட்! அங்கே தான், பசி தாங்க முடியாமல், "தயவு செய்து ஐயா! இன்னும் கொஞ்சம்!" என்று உணவுக்குக் கெஞ்சுகிறான்.ஐயோ பாவம் என்று கொஞ்சம் சோறு போட்டால் இன்னும் கொஞ்சம் என்று கேட்பாயா என்று அங்கே இவன் மீது கோபம் வருகிறது ஐந்து பவுண்ட் கொடுக்கும் எவர் வேண்டுமானாலும் இவனை அழைத்துச் செல்லலாம் என்று முடிவாகிறது. அந்த நாளைய பிரிட்டிஷ் சமூக அமைப்பு, தங்களுடைய சொந்த ஜனங்களையே எப்படி நடத்தியது, ஆதரவற்ற, கைவிடப்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் எப்படி, வீட்டு அடிமைகளாக விற்கப்பட்டார்கள் என்பதைக் கொஞ்சம் ஆழ்ந்து யோசிக்க வைக்கிற பகுதி இது. பணம் படுத்தும் பாடு எப்படிப் பட்டது என்பதைப் போகிற போக்கிலேயே சொல்கிற இடமாகவும் இந்தப் பகுதி இருக்கிறது.

உள்ளூர் பாரிஷில்(ஒரு சர்ச் அமைப்பு) இருக்கும்  சோவெர்பெரி என்பவர்,  வேறு ஒரு மோசமான நபரிடம் தள்ளிவிட இருந்த நிலையில் தலையிட்டுத் தன வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த மனிதர் நல்லவர் தான்! ஆனால், அவர் மனைவிக்கு, இந்தச் சிறுவனைப் பிடிக்கவில்லை. அங்கே இருந்த வேலையாட்களுமே கூட இவனைக் கொடுமைப்படுத்துகிறார்கள். அதில் ஒருவனைத் திருப்பித் தாக்கியதால், தண்டிக்கப் படுகிறான். ஆலிவர்  அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓடுகிறான்! பசியும்,துயரமும் தொடர்ந்து துரத்துகிறது.

லண்டனை நோக்கிப் பயணப்படும் நேரத்தில்,  ஜாக் டாகின்ஸ் என்ற சம வயதுள்ள ஒருவனைச் சந்திக்கிறான்.

ஏய்ப்பதில் கலைஞன் (the artful dodger) என்றே அவனுடைய வட்டாரத்தில்  அழைக்கப்படுவதில் காரணமில்லாமல் இல்லை. பிக் பாக்கெட் அடிப்பதில் கலைஞன் மட்டுமில்லை, ஆலிவர் மாதிரி ஆதரவற்ற சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய கூட்டத்தில் சேர்க்கும் வலைஞனும் கூட! தன்னுடைய குரு ஃபாகின்சிடம் அழைத்துப் போகிறான். எளிதாகச் சம்பாதிக்கலாம், சுகமாக வாழலாம் என்ற கனவுகளைத் தந்திரமாக இப்படிப்பட்ட ஆதரவற்றவர்களிடம் விதைத்து, அவர்களை உபயோகிக்கும் ஒரு கொடூரமான கும்பல் அது.

கைக்குட்டை விற்கிற சாக்கில் தங்களைப் பிக்பாக்கெட் அடிப்பதற்குத் தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தெரிந்து, ஆலிவர் இந்தக் கும்பலை விட்டு விலக முனைகிறான். பிக்பாகெட் அடிக்கிற முயற்சியில் டாகின்ஸ் அம்பலப்பட்டு, ஆலிவரும் இன்னொருவனுமாக டாகின்சுடன் தப்பித்து ஓடுகிறார்கள். மற்ற இருவரும்தப்பித்துவிட, ஆலிவர் மட்டும் போலீசிடம் சிக்கிக் கொள்கிறான். நடந்ததைப் பார்த்த சாட்சிகளில் ஒருவர், ஆலிவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை எடுத்துச் சொல்லவும் விடுவிக்கப் படுகிறான். பிரவுன்லோ என்ற முதியவர் இவன் மேல் இரக்கப் பட்டுத் தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

அதுவும் நிலைக்காமல் போகிறது. கும்பல் தலைவன்  ஃபாகின்ஸ், தன்னுடைய கையாளான நான்சி என்ற பெண்ணை அனுப்பித் தந்திரமாக ஆலிவரை மறுபடி கும்பலுக்குள் கொண்டு வந்து விடுகிறான். வீடுபுகுந்து கொள்ளையடிக்கும் முயற்சி ஒன்றில் ஆலிவர் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப் படுகிறான். எதிர்பாராத விதமாக அந்த முயற்சி தோற்றுவிடுகிறது, ஆலிவர் சுடப்படுகிறான். வீட்டில் இருப்பவர்களால்,
ஆலிவர் காப்பாற்றப் பட்டு, அவர்களுடைய அரவணைப்பும் கிடைக்கிறது.

இவனை மறுபடி கும்பலுக்குள் சிக்க வைத்த நான்சி, இவன் மீது இரக்கம் கொள்கிறாள். ஆலிவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று தவிக்கிறாள். அதே கும்பலில் இருக்கும் இவளது காதலன் சைக்ஸ் எதிராக இருக்கிறான். திருட்டுக் கும்பலுக்குள்  மோன்க்ஸ் என்ற புது நபர் வந்து சேர்கிறான். ஆலிவரைத் தீர்த்துக் காட்டுவதில் அவன்  அதிக அக்கறை காட்டுகிறான். தொடர்ந்து நிகழும் மோதல்களில் சைக்ஸ் தன் காதலி நான்சியைக் கொன்று விட்டு, தப்பியோட முயலும்போது தானும் கொல்லப் படுகிறான்.

மோன்க்ஸ் ஏன் ஆலிவரைத் தீர்த்துக் கட்டுவதில் குறியாக இருக்கிறான் என்ற மர்மமும் உடைகிறது. அவன் ஆலிவருக்கு சகோதரன் முறையானவன்.  ஆலிவர் ஒரு பணக்காரனின் வாரிசு என்றெல்லாம் தெரிய வருகிறது. ஃபாகின்ஸ் கைது செய்யப் பட்டு மரண தண்டனை விதிக்கப் படுகிறது. அப்புறம், பிரிந்திருந்த உறவுகள் எல்லாம் சேர சுபம் சுபமே என்று கதை முடிகிறது.

புத்தக விமரிசனம் என்று முழுக்கதையுமே சொன்னால் எப்படி என்று கேட்கிறீர்களா?

இங்கே கதையில்  பெரிதாக ஒன்றுமே இல்லை.தமிழில் அனாதை ஆனந்தன் என்ற பெயரில் ஏவிஎம் தயாரிப்பில்,  ஏவிஎம் ராஜன், ஜெயலலிதா, மாஸ்டர் சேகர் நடித்து, இதே கதை படமாகவும் வந்தது. இப்போது சொன்ன அவுட்லைனை வைத்து படமாக வந்திருந்தாலும், முக்கியமான ஒன்று மிஸ்ஸிங்! அது தான், எழுத்தாளன், தான் வாழ்ந்த காலத்தை எழுத்தில் பிரதிபலித்துக் காட்டியிருந்த விஷயங்கள்!  அதை விட்டு விட்டு படமாக எடுத்தபோது, அங்கே எதுவுமே இல்லை! 


எழுத்தில் தெரியும் ஜீவனை, வாசிப்பின் வழியாக உணர முடிவது போல, மாற்று ஊடகமாகப் பார்க்கும் போது அவ்வளவாக எடுபடுவதுமில்லை.

கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தீர்களானால், ஏழாவது உலகம் கதை,(இன்னமும் படிக்கவில்லை) நான் கடவுள் படம்(பார்த்தாயிற்று) இவற்றில் பேசப்படும் பிச்சை எடுப்பவர்களின் நதி மூலம் இங்கே ஆலிவர் ட்விஸ்ட் கதையில் ஃபாகின்ஸ் கும்பலை வைத்து ஆரம்பிப்பதையுமே பார்க்க முடியும். இந்த அவலங்கள்,  பிரிட்டிஷ்காரர்கள் நாட்டை அடிமைப்படுத்தியவுடன் செய்த முதல் காரியம் கிராமங்கள் அழிக்கப் பட்டு, மக்கள் நகர்ப்புரங்களுக்குக் கூலிகளாக விரட்டப் பட்டதில் இருந்து ஆரம்பித்தது தான்! அதற்கு  முன்னால், இந்திய சமூகத்தில் இருந்ததே இல்லை! இந்திய கிராமப் பொருளாதாரம், சுயதேவைப் பூர்த்திப் பொருளாதாரமாக, பகிர்ந்து கொள்கிற தன்மையில் இருந்தது, கொஞ்சம் வரலாறு படித்தவர்களுமே தேடித் தெரிந்து கொள்ள முடிகிற விஷயம்.

ஆலிவர் ட்விஸ்ட்! நூற்றெழுபது வருடங்களுக்கு முன்னால் எழுதிய கதை தான்! இன்றைக்கும் கூட, சமூகம், பொருளாதாரம் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு ஊற்றுக் கண் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டு சொன்ன படைப்பாகவும் இருப்பது தான் இதன் சிறப்பு.

நாவலை முழுதாகப் படித்துப் பாருங்கள்! எழுத்தின் ஜீவனை அங்கே தான் கண்டு கொள்ள முடியும்!




Friday, February 5, 2010

பேராசையின் எல்லை எது ? The Moneychangers!


நீண்ட காலத்திற்குப் பின்னாலும் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தின் அந்த இரண்டு நாட்களை தெளிவாகவும், மன உளைச்சலோடும்  நிறையப் பேர் நினைவு படுத்திக் கொள்ளமுடிந்தது.....
 
அது ஒரு செவ்வாய்க் கிழமை. ஃபர்ஸ்ட்  மெர்கண்டைல் அமெரிக்கன் வங்கியின் தலைமை நிர்வாகியும், நிறுவனரின் பேரனுமான பென் ரோசெலி, ஒரு அறிவிப்பை வெளியிட்டது அன்று தான். தூக்கிவாரிப் போடும்படி இருந்த அந்த அறிவிப்பு, சோர்வளிப்பதாகவும் வங்கியின் எல்லாப் பகுதிகளிலும், தாண்டியும் கூடத் திரும்பத் திரும்ப எதிரொலித்தது.

அதற்கு மறுநாள் புதன்கிழமை,   ஃபர்ஸ்ட்  மெர்கண்டைல் அமெரிக்கன் வங்கியின் கொடிமரம் போல இருந்த நகரக் கிளையில் ஒரு திருட்டு நபர் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களை எவருமே எதிர்பார்த்திருக்க முடியாது -மூழ்கிப்போகிற அளவுக்கு நிதி நிலைமை, தனி மனிதத் துயரங்கள், மரணம் என்று வரிசையாக.

வங்கித்தலைவரின் அறிவிப்பு எந்த முன்தகவலுடனும் வரவில்லை. முன்கூட்டியே எந்தத் தகவலும் கசியவில்லை. பென் ரோசெலி தன்னுடைய முக்கியமான அதிகாரிகளைக்  காலை வேளையிலேயே, சிலரை வீட்டில் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்த நேரத்தில்இன்னும் சிலரை வேலைக்கு வந்த பின்னால், அதுதவிர நீண்ட நாட்களாக வேலை செய்து வந்த சிலரை, அவர்கள் அதிகாரிகள் இல்லையென்றாலும் கூட, பென் அவர்களைத் தன நண்பர்களாகக் கருதியது தான், எல்லோருக்கும் ஒரே மாதிரியான செய்தி
 
"தயவு செய்து தலைமையகத்தின் போர்ட் ரூமில் காலை பதினோரு மணிக்கு இருக்கவும்."

ஆர்தர் ஹெய்லியின்   The Moneychangers  கதை இப்படி ஆரம்பிக்கிறது! 


ஃபர்ஸ்ட்  மெர்கண்டைல் அமெரிக்கன்! 
 
ஒரு நடுத்தரமான வங்கி! அதன் தலைமை நிர்வாகி, தன்னுடைய உடல்நலம் நலிந்துகொண்டே இருப்பதை, பொறுப்பை வேறொருவர் விரைவில் ஏற்க வேண்டிவரும் என்று  அறிவிக்கிற தருணத்தில் இருந்து கதை தொடங்குகிறது. அடுத்து, அந்தப் பொறுப்புக்குத் தகுதியான இரண்டுபேர்கள் இருக்கிறார்கள். வங்கித் தொழிலில் காண முடிகிற  நேரெதிரான குணாதிசயம், இந்த இரண்டு பாத்திரங்கள் வழியாக வெளிப்படுத்தப் படுகிறது. அலெக்ஸ் வண்டர்வூர்ட்,ரோஸ்கோ  ஹேவர்ட்!  இந்த இருவரில் ஒருவர் தான், அடுத்துத் தலைமைப் பொறுப்பிற்கு வர முடியும் என்ற நிலையில், பதவியைப் பிடிப்பதற்கான ஆட்டமாகக் கதை விரிகிறது.

அலெக்ஸ்,  வங்கித் தொழிலுக்குண்டான மரபுகளை மீறாத,  செல்வாக்கைத் தேடுவது எப்படி, எதைக் கொடுத்து எதைப் பெறுவது என்ற நுணுக்கமான ஆதரவு திரட்டும் கலை அறியாதவராக! வங்கித் தொழிலை எப்படிக் கண்ணியத்துடனும், கவுரவத்துடனும் நடத்துவது என்பதை அறிந்தவராக, ஒரு நல்ல வங்கியாளராக ஒவ்வொரு கட்டத்திலும் கதை முழுவதும் அறிமுகமாகிறார்.

ரோஸ்கோ, வங்கியின் இயக்குநர்களுடைய ஆதரவைத் திரட்டுவது எப்படி என்ற கலையை அறிந்தவராக, உச்சிக்குப் போகவேண்டும் என்ற நிறைய ஆசை!  அதற்காக சமரசங்கள் செய்துகொள்ளத் தயாராக இருப்பவராக, என்ன ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கத்  தயாராக இருப்பவராக கதை விரிகிறது. வங்கியின் ஆதாயத்தைக் குறுகியகாலத்திலேயே பெருக்கிக் காட்டுவது, இயக்குநர்களுடைய நம்பிக்கையைப் பெறுவது, பெரிய கார்பரேட்களின் கணக்கை கொண்டு வருவது, தானும் பெரிய ஆளாவது என்று ரோஸ்கோவுடைய கனவுகள் வளர்ந்துகொண்டு போகின்றன.

ஒரு பக்கம்,நாணயமான, நிதானமான வங்கியாளர்! இன்னொரு பக்கம் பேராசை பிடித்த வங்கியாளர்!

இரண்டு விதமான போக்குகளைத்  தெரிவு செய்தாயிற்று! போட்டி என்று வரும்போது, இந்த இரண்டு நேரெதிரான தன்மைகளுக்கு ஆதரவாகவோ எதிராகவோ சம்பவங்கள் நிகழவேண்டுமே! வரிசையாக ஆரம்பிக்கின்றன!

இங்கே நம்மூர் வங்கிகளில் பார்ப்பது போல 'வாங்க வேண்டுமானால்'  பத்துப் பெர்சென்ட்  'கொடுக்கவேண்டும்' என்ற மாதிரி வெகு சீப்பான கற்பனைக்கெல்லாம் போய்விடாதீர்கள்! அமெரிக்க வங்கிகள் இயங்கும் விதமே வேறு! அங்கே பேராசை, முதலீட்டாளர்களுக்கு நிறைய ஆதாயம் தேடித் தருவது என்ற போர்வையில் ஆரம்பிக்கிறது. ஆதாயம் தேடித் தருகிறேன் என்ற சாக்கில் தங்களும் ஆதாயம் அடைந்துகொள்ளும் நபர்களால், ஏற்பட்ட சரிவை, முப்பத்து நான்கு வருடங்களுக்கு முன்னால் எழுதினது தான், ஆனால், இன்றைக்கும் பொருந்தி வருகிற உண்மைகளாக ஆர்தர் ஹைலி கதையை முன்னெடுத்துச் செல்கிறார்.

ராஜா ராணி கதையாக இருந்தால், கத்திச் சண்டை போட நம்பியார், வீரப்பா மாதிரி வில்லன்களை எதிர்பார்க்கலாம். இதுவோ வங்கித்துறையைப் பற்றியதாயிற்றே! வில்லன் எப்படி இருப்பான்?

கார்பரேட், மெகா கார்பரேட் வடிவத்தைத் தவிர வேறு பொருத்தமான வில்லன் எது? சுனாட்கோ என்ற வடிவத்தில் ஒரு கார்பரேட் வில்லன் கதையில் நுழைகிறது! ஃபர்ஸ்ட்  மெர்கண்டைல் அமெரிக்கன் வங்கியின் இயக்குனர்களில் ஒருவர், சுனாட்கோ நிறுவனத் தலைவரை அறிமுகம் செய்து வைக்கிறேன், சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் வளமான எதிர்காலம் கிடைக்கும் என்று ரோஸ்கோவுக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவிப்பதோடு, சேர்த்துச் சொல்கிறார். 

சொன்னபடியே அந்த இயக்குனரும், ரோஸ்கோவும், சுனாட்கோ நிறுவனத் தலைவரை அவரது சொகுசு விமானத்தில் சந்திக்கிறார்கள். பலமான உபசாரம் நடக்கிறது. அமெரிக்க செனேட்டர்  ஒருவரும் (நம்மூர் எம் பி மாதிரி) விமானத்தில் இருக்கிறார்.  ரோஸ்கோ  பிரமிப்பில் இருந்து விடுபடுவதற்கு முன்னரே, ஐந்து கோடி டாலர் கடன் வசதி செய்ய ஏற்பாடு செய்ய ரோஸ்கோவுக்கு  அதிகாரம் இருக்கிறதா, இல்லையென்றால் கூட  பரவாயில்லை என்ற கொக்கி விழுகிறது.

சுனாட்கோ நாடறிந்த  மிகப் பெரிய நிறுவனம்! அதனுடன் வியாபாரத் தொடர்பு என்பது, லோகல் வங்கியாக மட்டுமே அறியப்பட்டிருக்கும் ஃபர்ஸ்ட்  மெர்கண்டைல் அமெரிக்கன் வங்கி, நாடறிந்த வங்கிகள் வரிசைக்கு வந்து விடும்! கடன் மீது பெறும் வட்டி,  வங்கிக்குப் பேராதாயமாக இருக்கும் என்ற கணக்குகளை ரோஸ்கோ மனதிலேயே போட்டுப் பார்த்துவிட்டு, தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்கும் சந்தர்ப்பம் இது தான் என்று முடிவு செய்கிறார். இயக்குனர் குழுவில், பேசிவிட்டு, முடிவைச் சொல்வதாக அந்த உல்லாசப் பயணம் அடுத்த திருப்பத்திற்குத் தயாராகிறது!.


உல்லாசப் பயணத்திற்கு நினைவுப் பரிசாக, அழகான பெண்களும், சுனாட்கோ நிறுவனத்தின் பங்குப் பத்திரங்களும் ரோஸ்கோவுக்கு அளிக்கப் படுகின்றன. ரோஸ்கோவுக்கு, கொஞ்சம் குற்ற உணர்வு தலைதூக்கினாலும், மிக அருமையான வாய்ப்பைத் தனது வங்கிக்காக சாதித்திருப்பதாகப் பெருமிதமும்,  தலைமைப் பொறுப்புக்குத் தன்னைத் தவிர வேறு போட்டியே இல்லாத உச்சத்திற்கு, இந்த டீலிங் கொண்டுபோய்விடும் என்ற சந்தோஷமும் மறைத்து விடுகின்றன.


இயக்குனர்  குழுவின் முன் இந்தக் கடன் விண்ணப்பத்தை ரோஸ்கோ  எடுத்து வைத்து, அது வரை சிறிய அளவில் மட்டுமே அறியப் பட்டிருக்கும் ஃபர்ஸ்ட்  மெர்கண்டைல் அமெரிக்கன் வங்கி எப்படி பெரிய வங்கிகளுக்குச்சமமாக வந்துவிடும், எவ்வளவு பெரிய ஆதாயம் கிடைக்கும் என்று எடுத்துச் சொல்லும் போது, அலெக்ஸ் ஒருவர் மட்டுமே, அதை எதிர்த்துக் கருத்துச் சொல்லுகிறார்.

இந்த இடத்தில், ஒரு நேர்மையான, திறமையான வங்கியாளன் எப்படியிருக்கவேண்டும் என்பதை அலெக்ஸ் பாத்திரத்தின் வழியாகக் கதாசிரியர் சொல்கிறார். அடிப்படைக் கோட்பாடுகளை மறந்து விடாமல், போதுமான எச்சரிக்கையோடு, மரபுவழியிலான வங்கித் தொழிலைச்  செய்து வந்தாலே ஆதாயம் தானே வரும், கொஞ்சம் காத்திருக்கவும் தெரிய வேண்டும் என்ற  ethical banker வெளிப்படும் தருணம் இது.

ரோஸ்கோவுக்கு,  எல்லாமே இன்ஸ்டன்ட்- இப்போதே தான்! வங்கித் தொழிலின் மரபுகள், அனுபவப் பாடங்கள் எல்லாவற்றையும் தூரத் தள்ளி வைத்து விட்டு, கொஞ்சம் அதிக ரிஸ்க் எடுத்தால் மட்டுமே அதிக ஆதாயத்தைப் பெற முடியும்!  உச்சிக்கு வரத் துடிக்கும் ஒருவன், அதற்காக, எல்லாக் கோட்பாடுகளையும் இழந்துவிடத் தயாராக இருக்கும் நிலை மிக நுணுக்கமாக வெளிப்படும் தருணமாகவும் இருக்கிறது. இயக்குனர் குழு, இருவருடைய கருத்தையும் கேட்டுக் கொண்டு, பேராசையால் உந்தப் படும் ஒரு கூட்டம் எப்படி முடிவு செய்யும் என்பதும் அங்கேயே  தீர்மானிக்கப் பட்டும் விடுகிறது.
 
கார்பரேட் நிறுவனத்திற்குக் கடன் கொடுப்பதென்று முடிவாகி விட்டது, சரி! எங்கே இருந்து? அங்கே தான் கதையின், இன்னொரு சுவாரசியமான பக்கம் இருக்கிறது. ஏற்கெனெவே, சிறிய நடுத்தர வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க ஒப்புக் கொண்ட தொகையில் கை வைப்பதில் இருந்து தானே ஆரம்பிக்கும்!?
 
அந்த சிறிய நகரத்தின் ஜனங்களுக்குத் துணையாக இருந்த வங்கி, திடீரென்று, அவர்களைக் கைகழுவி விடுகிறது. அந்த மக்கள், வங்கி நிர்வாகத்திற்குத் தங்களது எதிர்ப்பை, மிக அமைதியாகத் தெரிவிக்கிறார்கள்.

வங்கிகளோடு வரவு செலவு வைத்துக் கொள்வதைக் கூட நல்லதென்றும், கெட்டதென்றும், பேரழிவுக்கு அச்சாரம் என்றும் மூன்று விதமாகச் சொல்லலாம்! அமெரிக்க நிதித் துறையில் சென்ற வருடம் ஏற்பட்ட சரிவு, பிரச்சினையின் மிகச் சிறிய பகுதிதான்! உடனடி லாபம் அதுவும் அதிகமாக என்ற வங்கி நிதித்துறை நிறுவனங்களின் பேராசையால் எழுந்தது!

The Money Changers!
 

ஆர்தர் ஹைலி எழுதிய நாவல்! இரண்டு நேர் எதிரான குணாதிசயங்கள் கொண்ட வங்கி நிர்வாகிகளை வைத்து, வங்கித் துறை எப்படி பேராசையால் இயங்குகிறது, தான் சேதப்படுவதுமல்லாமல், சுற்றி இருப்பவர்களையுமே நாசம் செய்கிறது என்பதை அழகாகச் சொன்ன புதினம்!
 
அவசியம் படிக்கவேண்டும் என்று நான் பரிந்துரைக்கும் புதினம் இது. வெறும் கதை என்ற அளவோடு நின்று விடாமல், நிறைய வங்கித் துறை சார்ந்த தகவல்களை, கிரெடிட் கார்ட் உள்ளிட்டு, மேற்கத்திய வங்கிகள் இயங்கும் விதத்தை மிகத் தெளிவாகச் சொல்கிறார் ஆசிரியர். டாலர் முதலீட்டை விட தங்கத்தில் முதலீடு செய்வது அதிகப் பாதுகாப்பானது என்பதை, கதையினூடே, மிகுந்த கவனத்துடன், ஆதாரங்களை வைத்துச் சொல்கிறார்.

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் வெளிவந்த புத்தகம், என்றாலும், இன்றைக்கும் வங்கித் துறையைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் புதினம். இங்கே புத்தகக் கடைகளில் 130 ரூபாய்க்குக்கிடைக்கிறது.  
 


 
 

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)